பாகுபாடு இன்றி மணல் வழங்க கோரிக்கை
பாகுபாடு இன்றி மணல் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது;
சீர்காழி அருகே உள்ள புத்தூரில் தமிழ் மண் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் என்கிற பாபு, பொருளாளர் கோகுல், ஆலோசகர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சின்னமணி வரவேற்று பேசினார். கூட்டத்தில், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குன்னம், பாலூரான்படுகை ஆகிய இடங்களில் இயங்கும் அரசு மணல் குவாரி அரசு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அனைத்து லாரிகளுக்கும் அரசு அறிவித்த அளவின்படி பாகுபாடு இன்றி மணல் வழங்க வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மணல் லாரிகள் மீது தார்பாய் மூடி செல்ல வேண்டும். காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மணல் லாரிகளை இயக்கக் கூடாது. வெளியூரில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் ராஜா, செந்தில், பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெரம்பூர் கார்த்திக் நன்றி கூறினார்.