அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

பேர்நாயக்கர்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-08-06 20:24 GMT

தாயில்பட்டி, 

பேர்நாயக்கர்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை வசதி

வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர்நாயக்கர்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கண்ணன் கோவில் செல்லும் சாலை நீண்ட காலமாக மண்சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

ஆதலால் இந்த வழியாக செல்லும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவை இந்த பகுதியில் தான் உள்ளன. இதனால் இந்த பகுதியில் மழைக்காலங்களில் சிரமத்துடன் தான் செல்ல வேண்டி இருக்கிறது.

சுகாதார வளாகம்

எனவே இந்த பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் புதிய தொட்டி கட்டப்படாததால் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்தும் குடிநீர் வழங்கப்படாததால் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக இருந்து வருகிறது. மானூர் குடிநீர் தடை இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் மூடப்பட்டு இருப்பதால் பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

அதிகாரிகள் நடவடிக்கை

எனவே மகளிர் சுகாதார வளாகத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் பேர்நாயக்கர்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு நிழற்குடை கூடை வசதி இல்லாததால் வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க முடியாமல் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்