தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச பயணிகள் பரிமாற்று விமான நிலையமாக மாற்ற கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையத்தை, சர்வதேச பயணிகள் பரிமாற்று விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் மத்திய மந்திரி வி.கே.சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-01-01 18:45 GMT

தூத்துக்குடி விமான நிலையத்தை, சர்வதேச பயணிகள் பரிமாற்று விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் மத்திய மந்திரி வி.கே.சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனு

சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி வி.கே.சிங் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில், தூத்துக்குடி விமான நிலையத்தை ஒரு சர்வதேச பரிமாற்றம் மற்றும் தெற்காசியாவின் விமான சரக்கு மையமாக மேம்படுத்த வேண்டும். மதுரையை தாண்டி தென்னிந்தியா முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஒரே விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் உள்ளது. தென்னிந்திய விமான நிலையம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்.

பயணிகள் பரிமாற்றம்

தூத்துக்குடி விமான நிலையத்தை புதிய அதிநவீன சர்வதேச பயணிகள் பரிமாற்றம் விமான நிலைய முனையம் மற்றும் விமான சரக்கு பரிமாற்று மையமாகவும் மாற்ற வேண்டும்.

இதற்கான கட்டுமானம், போயிங் 747, ஏர் பஸ் 380, அன்டோனோவ்-ஆன் 225 போன்ற விமானங்களை இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு புதிய ஓடுபாதைகள் மற்றும் தரை ஆதரவு உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச விமான நிலைய முனையம் ஆகியவற்றை நிர்மாணிப்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.

தூத்துக்குடி விமான நிலையத்தை, இந்தியாவில் இருந்து உலகின் அனைத்து முக்கிய விமான நிலையங்களையும் இணைக்கும் விமான நிலையமாக மாற்ற வேண்டும். வணிகம், தொழில்துறை மற்றும் பொது மக்களின் ஒட்டுமொத்த நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

அப்போது, விமான நிலைய இயக்குனர் சிவப்பிரசாத், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் ரமேஷ், விமான நிலைய விரிவாக்க பணி இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்