சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் சேதமடைந்த நூலக கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என கோாிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-17 19:06 GMT

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் சேதமடைந்த நூலக கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என கோாிக்கை விடுத்துள்ளனர்.

நூலகம்

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிளை நூலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் வருவதற்கே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது.

அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடமும் பழுது அடைந்து காணப்படுகிறது. இங்குள்ள பஸ் நிறுத்தத்திலிருந்து கட்டனார்பட்டி, இ. முத்துலிங்காபுரம் மற்றும் சோரம்பட்டி, வடமலாபுரம் செல்லக்கூடிய தார் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.

தரைப்பாலம்

அதே சாலையில் உள்ள தரைப்பாலமும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையை கடக்க கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மழைக்காலத்தில் தரைப்பாலம் முற்றிலும் மழைநீரில் மூழ்கி போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தரைப்பாலம் உள்ள பகுதியில் புதியதாக பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுகாதார வளாகம்

மேலும் இங்குள்ள ஊராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள தெப்பத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து கிடக்கிறது. ஊரின் மையத்தில் சுகாதார வளாக வசதி இல்லை. ஏற்கனவே இருந்த சுகாதார வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது.

குப்பைகளை கொட்டுவதற்கு முறையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படாததால் அவை தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சங்கரலிங்கபுரத்தில் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்