அலுவலக உதவியாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டுகோள்
அலுவலக உதவியாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.;
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தபால் எடுத்து செல்லும் அலுவலக உதவியாளர்களுக்கு பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பதவி உயர்வு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர்களுக்கு வீட்டுமனை வழங்க ஆவண செய்ய வேண்டும். மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர், காவலர் மற்றும் ஏவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வருவாய்த்துறையில் இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். சீருடை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களை கோரிக்கையாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம், சங்கம் சார்பாக வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.