பழுதடைந்த மின்கம்பிகளை அகற்றி விட்டு புதிதாக பொருத்த வேண்டும்
பூம்புகார், திருவெண்காடு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பழுதடைந்த மின்கம்பிகளை அகற்றி விட்டு புதிதாக பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருவெண்காடு:
பூம்புகார், திருவெண்காடு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பழுதடைந்த மின்கம்பிகளை அகற்றி விட்டு புதிதாக பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
வர்த்தக நிறுவனங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் திருவெண்காடு ஆகிய பகுதிகளை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள 110 கிலோ வாட் மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், இறால் வளர்ப்பு பண்ணைகள் அமைந்துள்ளன. நவகிரக கோவில்களான கேது கோவில் மற்றும் புதன் கோவில் அமைந்துள்ளது.இதேபோல் நாங்கூர் பகுதியில் 11 பெருமாள் மற்றும் 12 சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அடிக்கடி மின்தடை
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் சிறிது மழை பெய்தால் கூட மின்சாரம் தடைப்படுவது வாடிக்கையாக உள்ளது.இதனால் வர்த்தகர்கள், மீன் பிடி தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் மின்வினியோகம் செய்யும் மின் கம்பிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டது. இதனால் அந்த மின் கம்பிகள் பல இடங்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
மின்கம்பிகளை மாற்ற வேண்டும்
இந்த நிலையில் மழை மற்றும் காற்று வீசினால் பழுதடைந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் வந்து மழையை கூட பொருட்படுத்தாமல் பழுதடைந்த மின் கம்பிகளை பழுது நீக்கம் செய்து வருகின்றனர். பூம்புகார், திருவெண்காடு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அவதிப்பட்டு வருகிறோம்.எனவே மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்த கம்பிகளுக்கு பதிலாக புதிய கம்பிகளை பொருத்த வேண்டும். இல்லையென்றால் வரும் மழைக்காலங்களில் முற்றிலும் மின்வினியோகம் தடைப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.