சாக்கடை கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குந்தாரப்பள்ளி அருகே சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குருபரப்பள்ளி:
குந்தாரப்பள்ளி அருகே சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாக்கடை கால்வாய்
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் இருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். வணிக வளாகங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்பனப்பள்ளி செல்லகூடிய சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் அந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
சாலையிலேயே கழிவுநீர் செல்வதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவகள் வந்து செல்ல கூடிய குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்பனப்பள்ளி செல்லக்கூடிய பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.