குடியரசு தின விழா-ஒத்திகை நிகழ்ச்சி மெரினா காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெரினா காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிக்காக 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Update: 2023-01-18 05:49 GMT

நம் நாட்டின் குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26-ந்தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 20, 22 மற்றும் 24 ஆகிய 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே 26-ந்தேதி மற்றும் ஒத்திகை நடைபெறும் 3 நாட்கள் என 4 நாட்கள் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

* இந்த 4 நாட்கள் காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

* அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் மாற்றப்படும்.

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே. ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பஸ்கள் உள்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்படும். ராயப்பேட்டை ஒன் பாயிண்ட், ராயப்பேட்டை ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பீட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பஸ் வழித்தடம் எண்-21ஜி ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, அவை ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம்.

* மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணாசதுக்கம் நோக்கி வரும் மாநகர பஸ் வழித்தடம் எண்- 45பி மற்றும் 12 ஜி ஆகியவை நீல்கிரிஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயபேட்டை ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை, வழியாக தற்காலிக பஸ் நிறுத்தமான சிந்தாதரிப்பேட்டை ரெயில் நிலையம் செல்லலாம்.

* டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

* டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

* பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி அனுப்பப்படும்.

* வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பஸ் தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி அனுப்பப்படும்.

* பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜீ.பி.ரோடு, ராயபேட்டை மணிகூண்டு, வெஸ்ட் காட் சாலை, ராயபேட்டை ஒன் பாயிண்ட், நடேசன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.

* வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்