கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.;

Update: 2023-10-15 18:45 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத குழாய்கள் மூலம் நாகை மாவட்டம் திருமருகல் அருகே நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.

இதில் இருந்து ராட்சத குழாய் மூலமாக திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது.

குழாயில் உடைப்பு

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரடி அருகில் 2 இடங்களிலும், தெற்கு வீதியில் 1 இடத்திலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்கள் குடிநீர் வீணாகி வந்தது. இதனால் குடிநீர் வினியோகம் பெறும் மருங்கூர், நெய்குப்பை, வேளங்குடி, கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் இருந்தது.

சாலையோரம் வீணாகும் குடிநீர் பள்ளங்களில் தேங்கி நின்றதால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

சரிசெய்யப்பட்டது

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த மாதம் 13-ந்தேதி படத்துடன் பிரசுரம் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குழாய் உடைப்புகளை சரி செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்