சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு: கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க 3-வது நாளாக முயற்சி
கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க நேற்று 3-வது நாளாக முயற்சி நடந்தது. அதிக விசைத்திறன் கொண்ட இழுவை கப்பலை கொண்டு வந்து மீட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான 2 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மிதவை கப்பலில் நீராவி ஜெனரேட்டர்களை ஏற்றி இழுவை கப்பல் மூலம் கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப்பகுதியின் நுழைவு வாயில் பகுதியில் கடந்த 8-ந்தேதி அதிகாலை வந்தபோது, மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையே உள்ள இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் மிதவை கப்பல் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு பாறையில் தட்டி நிற்கிறது.
சேதம் சீரமைப்பு
அந்த மிதவை கப்பலை மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சென்ற வல்லுனர் குழுவினர் மிதவை கப்பலுக்கு அடியில் ராட்சத பலூனை வைத்து அதில் காற்றை நிரப்பி மிதக்க செய்து மீட்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
நேற்று 3-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. முதலில், பாறையில் சிக்கியதால் மிதவை கப்பலில் ஆங்காங்கே சேதம் அடைந்திருந்த பகுதியை தொழில்நுட்ப வல்லுனர்கள் வெல்டிங் மூலம் சீரமைத்தனர். பின்னர் இழுவை கப்பல் மூலம் மிதவை கப்பலை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவற்றுக்கு இடையே இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டிருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டதால் முயற்சி கைகூடவில்லை.
நடவடிக்கை
இதையடுத்து மீட்பு குழுவினர் கொச்சி அல்லது மும்பை துறைமுகத்தில் இருந்து அதிக விசைத்திறன் கொண்ட இழுவை கப்பலை கொண்டு வந்து மிதவை கப்பலை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். அங்கிருந்து இழுவை கப்பல் கொண்டு வரப்பட்டதும் மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, மிதவை கப்பலில் உள்ள நீராவி ஜெனரேட்டர்களை கூடங்குளத்தில் உள்ள ரஷிய அணுசக்தி ஏற்றுமதி கழக (ஆட்டம்ஸ்டாம்) விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, அதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.