வாடகை காரை விற்று மோசடி; பெண் உள்பட 4 பேர் கைது
பொள்ளாச்சியில் வாடகை காரை விற்று மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வாடகை காரை விற்று மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாடகை கார்
பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கனகமணி (வயது 31). இவர் சொந்தமான கார் வைத்து உள்ளார். இவருக்கு பழனியப்பா லே அவுட்டை சேர்ந்த மதினா பேகம் (33), கோவை ஈச்சனாரியை சேர்ந்த பால்ராஜ் (41) ஆகியோர் நண்பர்கள் ஆவர்.
இந்த நிலையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு பணம் வசூலிக்க செல்வதற்கு கார் தேவைப்படுகிறது, எனவே உங்கள் காரை கொடுத்தால் மாத வாடகை கொடுப்பதாக கனகமணியிடம், மதினாபேகம் மற்றும் பால்ராஜ் கூறியதாக தெரிகிறது. இதை நம்பி கனகமணி தனது காரை கொடுத்தார்.
4 பேர் கைது
ஆனால் கடந்த 3 மாதமாக வாடகை பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு வாடகை பணத்தை கொடுப்பதாக இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மதினாபேகம், பால்ராஜ் ஆகியோர் சேர்ந்து காரை கோவை ராம்நகரை சேர்ந்த அமுதன் (43) என்பவருக்கு விற்பனை செய்ததும், அவர் செல்வபுரத்தை சேர்ந்த அபுதாகீர் (47) என்பவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாடகை காரை விற்று மோசடி செய்ததாக மதினாபேகம், பால்ராஜ், அமுதன், அபுதாகீர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைதானவர்களை கோர்ட்டில் அஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.