அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றம்

நீலகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

Update: 2022-08-13 12:29 GMT

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

கலெக்டர் உத்தரவு

நீலகிரி மாவட்டம், பசுமை நிறைந்த மலைப்பிரதேசம் ஆகும். இதனை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்களை உடனடியாக அகற்றும்படி கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். அதன்படி கூடலூரில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) காந்திராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சரவணன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு நடத்தினர். பின்னர் ஊட்டி-மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கேரளா செல்லும் சாலையோரங்களில் விளம்பர பலகைகள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பலகைகள் அகற்றம்

இதையடுத்து அந்த விளம்பர பலகைகளை அகற்றும் பணி நடைபெற்றது. முதற்கட்டமாக 5 பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது 5-வது வாரமாக அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்களை அகற்றும் பணி ஊட்டி, கூடலூர், குன்னூர், நெல்லியாளம் நகராட்சிகளில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்