நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-01-09 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

நகராட்சி மார்க்கெட்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், மளிகை, துணி, இறைச்சி என 1,500 கடைகள் உள்ளன. மேலும் 500 தற்காலிக கடைகளும் உள்ளது. இங்கு ஊட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த மார்க்கெட்டுக்கு தினமும் 3,500 முதல் 4,000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

மேலும் வார விடுமுறை நாட்களில் 4,000 முதல் 5,000 வாடிக்கையாளர்கள் வருவார்கள். வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இங்கு 15 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் பிரச்சினையாக உள்ளது. சில நேரங்களில் கால்நடைகள் நடைபாதைகளில் உலா வருகின்றன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதற்கிடையே வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து தங்களது பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் பொதுமக்கள் நடந்து சென்று பொருட்கள் வாங்க இடையூறு ஏற்பட்டு வந்தது. மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க மற்றும் தூய்மை பணியில் ஈடுபட சிரமம் அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர்கள் சண்முகம், நஞ்சுண்டன் ஆகியோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மார்க்கெட்டில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதன்படி 100-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் நடைபாதையை ஆக்கிரமிக்கக்கூடாது. விற்பனை பொருட்களை கடைக்குள் வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்