செந்தில் பாலாஜியிடம் இருந்து இலாகாக்கள் நீக்கம்: அரசு இணையதளத்தில் அதிகாரபூர்வ மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து இலாகாக்கள் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு இணையதளத்தில் அதிகாரபூர்வமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். அதேநேரத்தில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால், அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்தளிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.
கவர்னர் ஏற்க மறுப்பு
அதற்கான பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிவைத்தார். அதன்படி இலாகா மாறுதலை ஏற்றுக்கொண்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடந்த 16-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில், முதல்-அமைச்சரின் பரிந்துரையின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய இலாகாக்கள் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) ஆகிய இலாகாக்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் துறைகளாக ஒதுக்கப்படுகின்றன. அவர்கள் ஏற்கனவே கவனித்துவரும் துறைகளுடன் சேர்த்து இவற்றையும் கவனிப்பார்கள்.
ஆனால் செந்தில் பாலாஜி நேர்மை தவறியதற்காக குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதாலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும், அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பதை கவர்னர் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
அரசு இணையதளத்தில்...
அதைத் தொடர்ந்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படுகின்றன. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
அந்த அரசாணையை நிறைவேற்றும் விதமாக, தமிழக அரசு துறைகளுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் 21-வது அமைச்சர் என்ற செந்தில்பாலாஜியின் மூப்பின் நிலையில் மாற்றம் செய்யப்படவில்லை.