ஆவுடையார்கோவில் ஒன்றியம், முத்துக்குடா கிராமத்தில் கடல் பகுதிகளில் அலையாத்தி காடுகள் சூழ்ந்து உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் படகுமூலம் கடலுக்குள் சென்று இந்த அலையாத்தி காடுகளை ரசித்து வருகின்றனர். அலையாத்திக் காடுகளை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் பல கோடி ரூபாயில் இப்பகுதியில் சுற்றுலாத்தலம் அமைய இருக்கிறது. இந்த சுற்றுலா தலம் இருக்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலம் அமைய இருக்கும் இடத்திற்கு செல்லும் சாலையில் தனி நபர் கல்லு கால்கள் அமைத்து முள்வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆவுடையார் கோவில் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம் மோசஸ் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் மீமிசல் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலா தலத்திற்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த வேலிகளையும் அகற்றினர்.