சிவன்மலை படிக்கட்டுகளில் தடுப்புகள் அகற்றம்

சிவன்மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் வைத்து அடைத்த தடுப்புகளை போலீசார் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.;

Update: 2022-12-24 18:45 GMT

கூடலூர், 

சிவன்மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் வைத்து அடைத்த தடுப்புகளை போலீசார் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

படிக்கட்டுகள் அடைப்பு

கூடலூர் அருகே நம்பாலக்கோட்டையில் சிவன்மலையில் உள்ள சிவன் கோவிலில் தினமும் பூஜைகளும், மாதந்தோறும் பவுர்ணமி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல பக்தர்கள் சிலர் கோவிலுக்கு செல்வதற்காக மலைப்பாதையில் உள்ள படிக்கட்டுகளில் ஏற முயன்றனர். அப்போது மலைக்கு செல்ல முடியாத வகையில் படிக்கட்டுகள் மீது தடுப்புகள் வைத்து அடைத்து அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.

அதில் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை அறிந்த கோவில் கமிட்டியினர் கூடலூர் ஆர்.டி.ஓ. மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

போலீசார் அகற்றினர்

அப்போது நீதிமன்ற ஆணைப்படி பேனர் வைக்கப்பட்டதாக நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவில் கமிட்டியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். இதைக் கேட்ட போலீசார் நீதிமன்ற உத்தரவு நகலை எடுத்து வரும்படி கூறினர். வருகிற 26-ந் தேதி தருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நகலை எடுத்து வரும் வரையில் மலைப்பாதைக்கு செல்லும் படிக்கட்டுகளில் உள்ள தடுப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

பின்னர் பக்தர்கள் உதவியுடன் படிக்கட்டுகளில் இருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினர். பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்தனர். மேலும் சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் கடந்த 2 நாட்களாக பரபரப்பு நிலவி வந்த சூழலில் அமைதி திரும்பியது.

Tags:    

மேலும் செய்திகள்