போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண்மேடுகள் அகற்றம்
கூடலூர்-ஓவேலி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண்மேடுகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.;
கூடலூர்,
கூடலூர்-ஓவேலி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண்மேடுகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சாலையில் நடக்கும் மாணவர்கள்
கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி கிளன்வன்ஸ், ஆரோட்டுப்பாறை, பெரிய சோலை, சீபுரம், காந்திநகர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான தனியார் ஜீப்புகள், கார்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் அரசு மாதிரி மற்றும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் விடுதிகள், கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகம் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளது.
இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வீடு திரும்புகின்றனர். இதன் காரணமாக கூடலூர் நகரில் இருந்து நகராட்சி அலுவலகம் வழியாக ஓவேலி சாலையில் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். மேலும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அலுவலக வேலை நாட்களில் கடும் சிரமம் ஏற்படுகிறது.
மண்மேடுகள் அகற்றம்
இதனால் சாலையோரம் போக்குவரத்து மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மண்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் கூடலூர் நகராட்சி அலுவலகம் முதல் ஓவேலி சாலையோரம் இருந்த மண் மேடுகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சாலை முன்பு இருந்ததை விட அகலமாக மாறியது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் சாலையோரம் நடந்து செல்லும் வகையில் போதிய இடவசதி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண்மேடுகளை வெட்டி அகற்றியதால் சாலையோரம் நடந்து செல்வதற்கு இடவசதி கிடைத்து உள்ளது. மேலும் மண்மேடுகள் அகற்றிய இடத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றனர்.