18 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
18 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களில் போக்குவரத்து விதியை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்ஹாரன்) பொருத்தப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் சாலையில் செல்லும்போதும், பஸ் நிலையங்களில் வைத்தும் காற்று ஒலிப்பான்கள் தொடர்ந்து அடிப்பதால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே காற்று ஒலிப்பான்களை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று மாலை வேலூர் பழைய பஸ்நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில அரசு, தனியார் பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை உடனடியாக அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேஷ்கண்ணா ஆகியோர் பஸ்நிலையத்தில் நின்ற 27 பஸ்களை ஆய்வு செய்து 9 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றினர். தொடர்ந்து வேலூர் புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த 9 அரசு, தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.