ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

விருத்தாசலம் அருகே ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-06 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையை ஆக்கிரமித்து சுமார் 39 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த நிலையில் ஏரிக்கரை ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என கூறி பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். திடீரென காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

மேலும் வீடுகளை அகற்றிக்கொள்ள கால அவகாசமும் வழங்க வேண்டும் என கூறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து பயனாளிகளை தேர்வு செய்து 7 பேருக்கும் மட்டும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள 3 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது வீடுகளை அகற்றிக்கொள்ளவில்லை.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை பொறியாளர் எத்திராஜுலு, உதவி பொறியாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் தொரவளூர் கிராமத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை பொக்லனை் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தகுதியுடையவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்