அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.;
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தீவிரமாக மழை பெய்யும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால், ஆங்காங்கே வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டது. மேலும் மண் சரிவுகள் மற்றும் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பருவமழையால் ஏற்படும் பேரிடரை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மழைநீர் கால்வாய் அடைப்புகள் நீக்குதல், மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
அபாயகரமான மரங்கள்
இந்தநிலையில் சமீபத்தில் கோத்தகிரி-மேட்டுப்பாயைம் சாலையில் உள்ள குஞ்சப்பனை பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு டானிங்டன் பகுதியில் மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
இதையடுத்து கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து அடிக்கடி தடைபடுவதை தடுக்கும் வகையில், சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான 6 ராட்சத மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து மரங்களை வெட்ட குன்னூர் ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெறப்பட்டது. நேற்று அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கியது. நெடுஞ்சாலைத்துறையினர் மின் வாளால் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.