போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.;
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் பே கோபுரம் திரவுபதி அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் இருந்து காந்தி சிலை வரையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் திருவண்ணாமலையின் வழியாக செல்லும் பெரும்பாலான வாகனங்கள் மாடவீதியில் காந்தி சிலை வழியாக தேரடி வீதி, கடலைக்கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு வழியாக செல்கிறது.
இதனால் மாட வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து கடந்த 24-ந் தேதி மாட வீதியில் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாரத்தில் 2 நாட்கள் மாட வீதியிலும், ஒரு நாள் கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிட்டார்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அதன்படி இன்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கலைமணி, நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த தள்ளுவண்டி கடைகள், பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டன.
மேலும் சாலையோரம் இருந்த கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த படிகள், போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டு இருந்த கடைகளின் முன்பு இருந்த தகர சீட்டுகள் போன்றவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பொருட்கள் அகற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், சாலை விரிவாக்கம் செல்வதற்காகவும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இதுபோன்று தொடர்ந்து அவ்வப்போது அக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றனர்.