கம்பத்தில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கம்பத்தில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.;

Update: 2023-02-22 20:30 GMT

கம்பத்தில், கே.கே.பட்டி சாலை பிரிவு பகுதியில் இருந்து ஐசக்போதகர் தெரு பிரிவு வரையிலான எல்.எப். மெயின் ரோட்டில் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. எல்.எப். மெயின் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சி 13-வது வார்டு நாட்டாண்மை சுருளி தெரு வழியாக சென்று வந்தன. இதனால் 13-வது வார்டு பொதுமக்கள், கழிவுநீர் நாட்டாண்மை தெருவுக்கு வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எல்.எப். மெயின் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை எல்.எப். மெயின் ரோடு வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி ஆலோசனை நடத்தினார். அப்போது கே.கே.பட்டி சாலை முதல் ஐசக் போதகர் தெரு வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாய் பாதையை மீட்க ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். அதன்படி, நேற்று உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமணன் தலைமையில் உதவிப்பொறியாளர் வைரக்குமார், நகராட்சி கட்டிட ஆய்வாளர் சலீம் ஆகியோர் முன்னிலையில், கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள், மேற்கூரைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மேலும் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்