தேனி பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்த பேனர்கள் அகற்றம்- பரபரப்பு
ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவதுபோல புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்;
பெரியகுளம்,
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை போட்டியால் அக்கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று தனது செல்வாக்கை காட்ட திருச்சியில் மாநாடு நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநாட்டுக்கு தொண்டர்களை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்தனர்.
அந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவதுபோல புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பேனர்களை அகற்ற வடகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பேனர்களை அகற்றாவிட்டால் நாங்களே கிழித்து எரிந்துவிடுவோம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே தாங்கள் வைத்த பேனர்களை அகற்றினர். இச்சம்பவத்தால் பெரியகுளத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.