27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் 14.11.2022 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேத விவரங்களின் அடிப்படையில், மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533.4630 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.43,92,01,750.50 வழங்கிடவும், மேலும், கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 5,222.192 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 8562 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.6,96,82,473.50 வழங்கிடவும், என மொத்தம் ரூ.50,88,84,224-னை 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கிட, தமிழக முதல்வரால் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.