தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
சீர்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்;
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆதமங்கலம் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெகவீரன் மனைவி சாந்தா (வயது 40). இவர் தனது கூரை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராமல் எற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் வீட்டில் இருந்த அரிசி, உடைகள், பாத்திரம், பர்னிச்சர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் அரசு சார்பில் அரிசி, மண்ணெண்ணெய், வேஷ்டி, சேலை, மளிகை பொருட்கள், காய்கறி, பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். அப்பொழுது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.