மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.;
அம்பை:
மணிமுத்தாறு அணை 80 அடிக்கு மேல் சென்றால் சுழற்சி முறையில் நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய தாலுகா விவசாயிகள் பயன்பெறும் வகையில் மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் மூன்று மற்றும் நான்கு ரீச்சுகளில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி மணிமுத்தாறு அணை 80 அடிக்கு மேல் உயர்ந்ததால் இதை நம்பி பயிரிடப்பட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்காததால் உண்ணாவிரதத்தை நோக்கி சென்றனர். இந்நிலையில் அரசின் அனுமதியுடன் நேற்று காலை மணிமுத்தாறு 80 அடி கால்வாய் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநிலக்கோட்ட நிர்வாக என்ஜினீயர் மாரியப்பன், உதவி நிர்வாக என்ஜினீயர் பேச்சிமுத்து, உதவி என்ஜினீயர்கள் ரமேஷ் குமார், மாரியப்பன், மகேஸ்வரன், மணிமுத்தாறு நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மாணிக்கராஜ், சேரன்மாதேவி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் 80 அடி கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். நேற்று முதல் சுமார் 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் என்றும், ஏற்கனவே மணிமுத்தாறு அணையை நம்பி பயிரிடப்பட்ட விவசாயிகள் பாதிக்காத வகையில் சுழற்சி முறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.