திருச்சி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்
திருச்சி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டிட தொழிலாளி பலி
திருச்சி பிராட்டியூர் மேலஅரிஜன தெருவை சேர்ந்தவர் கருப்பையா(வயது 56). கட்டிட தொழிலாளி. இவர் கே.கே.நகர் பகுதியில் ஒரு கட்டிடத்திற்கு சாரம் கட்டும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் கருப்பையா உரசினார். இதில் மின்சாரம் தாக்கி அவர் மேலே இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருப்பையாவின் மனைவி ஈஸ்வரி, கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கருப்பையாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கருப்பையாவின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
அப்போது அவர்கள், உயர் மின்னழுத்த கம்பி அருகே கட்டிடம் கட்ட அனுமதி அளித்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிட உரிமையாளரை கைது செய்ய வேண்டும். கருப்பையா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், கருப்பையாவின் உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபடப்போவதாகவும் கூறினர்.
இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜூ போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கருப்பைா குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.