கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணி திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-05 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுதா (வயது 19) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நிறைமாத கர்ப்பிணியான சுதா, நேற்று முன்தினம், பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வந்தார். அப்போது டாக்டா்கள், பிரசவத்திற்கு இன்னும் 20 நாட்கள் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுதாவும், ராமச்சந்திரனும் கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பஸ்சில் கல்வராயன்மலைக்கு சென்று கொண்டிருந்தனர். மாவடிப்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது, சுதாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராமச்சந்திரன் உடனடியாக பஸ்சை நிறுத்தி, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்தார்.

சாவு

அங்கு சுதாவை பரிசோதித்த டாக்டா்கள், அவரை மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சுதா இறந்து விட்டார். இதையடுத்து சுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.

சுதாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆவதால், கோட்டாட்சியர் விசாரணை நடத்த வேண்டும், ஆனால் நேற்று மாலை வரை இதுகுறித்து விசாரணை நடத்த கோட்டாட்சியர் வரவில்லை. இதனால் நேற்று மாலை 6.30 மணிவரை சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் உறிவினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையேற்ற உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இந்த மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்