வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க ஒத்திகை
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில் நடந்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் வெள்ளபாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ்குமார், வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சென்னை கீழ்ப்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதாவது வெள்ளத்தில் சிக்கி கொண்ட கர்ப்பிணிகள், முதியோர்களை பாதுகாப்பாக மீட்பது எப்படி?, தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருவதற்கு முன்பாக என்னென்ன சாதனங்களை பயன்படுத்தி வெள்ளத்தில் இருந்து மீண்டு வரலாம் என்பது போன்ற மீட்பு ஒத்திகையை தன்னார்வலர்களுக்கு தீயணைப்பு துறை அலுவலர்கள் செய்து காண்பித்தனர்.
இதேபோன்று ஏற்கனவே பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் இதுபோன்ற மீட்பு பணிகளை செய்து காண்பித்தனர்.
அதேபோன்று விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் திடீர் உடல்நல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்தும் செயல்முறை விளக்கத்தின் மூலம் எடுத்துக்கூறினர்.
இதுதவிர தீயணைப்பு மீட்பு துறை சார்பில் அவசர கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் நவீன சாதனங்கள் குறித்தும் எடுத்துக்கூறினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மத்திய சென்னை மாவட்ட (கீழ்ப்பாக்கம்) தீயணைப்பு அதிகாரி ப.சரவணன் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தீயணைப்பு துறை மட்டுமல்லாமல் தன்னார்வலர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். சுமார் 350 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே செல்லும் வகையில் மீட்பு வாகனம் தயார்நிலையில் உள்ளது. இந்த வாகனத்தில் மீட்பு பணிக்கான அனைத்து சாதனங்களும் தயாராக உள்ளன. பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.