ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதது வருத்தம் - ஏ.சி.சண்முகம்
ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் நேரில் ஆதரவு தெரிவித்தார்.;
சென்னை,
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வருகை தந்தனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாமக, தேமுதிக, த.மா.கா, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவை சந்தித்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார். பின்னர் பேசிய அவர், தான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது கூட கவலைப்படவில்லை என்றும், ஆனால் ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.