அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது?
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.;
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள்
தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தை அங்கீகாரம் பெறாமல் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை அந்த நிலம் புன்செய் நிலம் என்றுதான் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஏராளமான வீட்டு மனைகளை விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதன் பேரில் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அங்கீகாரம் பெறாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று சார் பதிவாளர் அலுவலகத்திலும் அறிவுறுத்தினோம்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் கேள்வி
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (22-ந்தேதி) ஒத்திவைத்தனர்.