மாணவன் மர்மச்சாவு குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

பூதப்பாண்டி அருகே மாணவன் மர்மச்சாவு குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2022-07-26 19:05 GMT

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே மாணவன் மர்மச்சாவு குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.

மாணவன் மர்மச்சாவு

கேரள மாநிலம் வில்லியம் பகுதியை சேர்ந்தவர் நிஜி பூ, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் ஆதில் முகமது (வயது 12). இவன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த மே மாதம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு ஆதில் முகமது, தாயுடன் வந்தான்.

கடந்த மே மாதம் 6-ந்தேதி ஆதில் முகமது விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றான். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. 8-ந்தேதி மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். இந்த மர்மச்சாவு குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனாலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

அறிக்கை அளிக்க உத்தரவு

இதற்கிடையே கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மாணவன் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து உதவ வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து மாணவனின் மரணம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் துணை சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் ஆதில் முகமதுவின் நண்பனை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவன் வீட்டிலும் சோதனை நடத்தினர். ஆனாலும் ஆதில் முகமதுவின் சட்டை, பனியன் கிடைக்கவில்லை.

போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை

இந்தநிலையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார் நேற்று காலையில் பூதப்பாண்டிக்கு வந்தார். அவர் மாணவன் ஆதில் முகமது மர்மசாவு குறித்து விசாரணை நடத்தினார். மேலும் மாணவன் இறந்து கிடந்த குளத்துக்கு ஆதில் முகமதுவின் நண்பனையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் அங்கிருந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு செயல்பட்டு வரும் கைரேகை பிரிவு, புகைப்பட பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடன் இருந்தார்.

அதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட டி.ஐ.ஜி.பிரவேஸ்குமார், குமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்