தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

ஒடுகத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-18 18:08 GMT

மின்சாரம் தாக்கி சாவு

ஒடுகத்தூரை அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகராவ். இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்டோர் கொய்யா பழங்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே கிராமத்தைசேர்ந்த நடேசன் (வயது 55) என்பரும் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பம்ப்செட்டில் இருந்து ஆழ்துளை கிணறுக்கு செல்லும் மின் ஒயரை எதிர்ப்பாராமல் நடேசன் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து உடலை சொந்த கிராமமான கொட்டாவூருக்கு அரசு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அப்போது நடேசன் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நடேசன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாமல் மின் ஒயரை தரைவழியாக கொண்டு சென்ற நிலத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்றும் போலீசாரிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து நிலத்தின் உரிமையாளரை வேப்பங்குப்பம் போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்