மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு புத்துணர்வு முகாம்கள்-டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வலியுறுத்தல்

மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மதுரையில் கூறினார்.

Update: 2023-07-08 20:24 GMT


மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மதுரையில் கூறினார்.

டி.ஜி.பி. மதுரை வருகை

தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால் பதவி ஏற்றுக்கொண்டு முதல் முறையாக நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். பின்னர் அவரது தலைமையில் மதுரை நகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. அதில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்குவது குறித்தும், குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ராகார்க், மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் மற்றும் போலீஸ் துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு அறிவுரை

அதை தொடர்ந்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிகாரிகளிடம் பேசும் போது கூறியதாவது:-

மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். சென்னையில் மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து குணப்படுத்தி உள்ளோம். அதே போன்று ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பதை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

தீர்வு காண வேண்டும்

அதிகாரிகளாகிய உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதனை உயர் அதிகாரிகளிடம் அல்லது குடும்பத்தினரிடம், நண்பர்களிடம், மருத்துவரிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நீங்கள் அதை பற்றி பேசினாலே பாதி பிரச்சினைகள் குறைந்து விடும். இது தொடர்பாக உங்களுடைய கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். பொதுமக்கள், காவல்துறையினர் நட்புறவை பேணிக்காப்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்