முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு; லோயர்கேம்பில் மின் உற்பத்தி சரிவு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் மின் உற்பத்தி சரிந்தது.;

Update: 2023-10-24 21:15 GMT

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் மின் உற்பத்தி சரிந்தது.

தொடர் மழை

தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.

கடந்த சில வாரங்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைய தொடங்கியது. அதே நேரத்தில் தமிழகத்திற்கு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியது.

இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.35 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,535 கன அடியாக இருந்தது.

தண்ணீர் திறப்பு குறைப்பு

இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,869 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 123.75 அடியாக உயர்ந்தது. தொடர் மழை எதிரொலியாக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி, வினாடிக்கு 1,322 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேலும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதால் கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி சரிந்தது. அதாவது 3 ஜெனரேட்டர்கள் மூலம் 118 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 81 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்