பால் உற்பத்தி குறைந்தது:அம்மை நோய் பாதிப்பால் மாடுகள் இறக்கும் அபாயம்- முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
அம்மை நோய் தாக்குதலால் மாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பால் உற்பத்தி குறைந்ததோடு இறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.;
பொள்ளாச்சி
அம்மை நோய் தாக்குதலால் மாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பால் உற்பத்தி குறைந்ததோடு இறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயத்தை தொடர்ந்து கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையம், குரும்ப பாளையம் பகுதியில் மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்நோய் ஒரு மாட்டில் இருந்து மற்ற மாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. பால் உற்பத்தி குறைவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் நோய் தாக்குதலால் மாடுகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பால் உற்பத்தி
குள்ளக்காபாளையம், குரும்பபாளையம், சடையகவுண்டனூர், பழனிகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 100 பேர் கால்நடை வளர்ப்பு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் 500 -க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. மாடுகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகின்றோம். இதற்கிடையில் மாடுகள் தற்போது அம்மை நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
மாடுகளின் தாடையில் வீக்கம், கால்களில் கொப்பளம் வருகிறது. கால் புண்ணில் அரிப்பு ஏற்படுவதால் மாடுகள் அவதிப்படுகின்றன. சினை மாடுகளுக்கு இந்த நோய் வந்தால் காப்பாற்றுவது இயலாத காரியமாகும். கடந்த சில நாட்களுக்கு முன் அம்மை நோய் தாக்கி ஒரு மாடு இறந்து விட்டது. பாதிக்கப்பட்ட மாட்டின் தோல் மூலமாகவோ, சுவாசிக்கும் காற்றின் மூலம் மற்ற மாடுகளுக்கு பரவும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.மேலும் அம்மை நோய் பாதித்த மாடுகளில் இருந்து பால் உற்பத்தி குறைந்து விடுகிறது. இந்நோயின் தாக்கம் அதிகமானால் மாடுகள் இறக்க நேரிடும். இந்நோய் பாதிப்பு குறித்து கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறப்பு முகாம்
கால்நடை மருத்துவமனைக்கு செல்வது என்றால் செங்குட்டுபாளையம், அல்லது கோவில்பாளையம் தான் செல்ல வேண்டும். மாடுகளின் கால்களில் புண் இருப்பதால் அவற்றை நடத்தி கூட்டி செல்வது முடியாது. வானங்களை ஏற்றி கொண்டு செல்வதற்கு ரூ.1000-த்திற்கு மேல் செலவாகிறது.
ஏற்கனவே பலமுறை குள்ளக்கா பாளையத்தில் கால்நடை மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் குள்ளக்காபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அம்மை நோய் பரவலை தடுக்க சிறப்பு முகாமில் நடத்தி, மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நடவடிக்கை எடுக்கப்படும்
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- குள்ளக்காபாளையத்தில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவுவதாக விவசாயிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து நோயின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும். இதை தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தி, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.