அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது. 17 மாவட்ட இளைஞர்கள் குவிந்தனர்.

Update: 2022-08-20 18:23 GMT

நாகர்கோவில், 

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது. 17 மாவட்ட இளைஞர்கள் குவிந்தனர்.

ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.

இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த முகாமானது வருகிற 1-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

இந்த திட்டத்தில் சேர கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இருந்து சுமார் 36 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்தனர். முதல் நாளில் ஆர்வத்துடன் 3 ஆயிரம் இளைஞர்கள் அங்கு குவிந்தனர். விளையாட்டு அரங்கம் முன்பு கூட்டம், கூட்டமாக இளைஞர்கள் கையில் அழைப்பு கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வந்திருந்ததை காணமுடிந்தது.

உடல் தகுதி தேர்வு

அதே சமயத்தில் முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்கள் அமர வசதியாக உழவர் சந்தை திடல், மாநகராட்சி புதிய அலுவலக கட்டிட வளாகம், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து நீச்சல் குளம் வரையிலான பகுதி, வடசேரி பஸ் நிலையம் அருகே உள்ள அரசு நிலம், நீச்சல் குளம் அருகே உள்ள அரசு நிலம் ஆகிய 5 இடங்களில் கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கேயே இளைஞர்களின் சான்றிதழ்களை ராணுவ அதிகாரிகள் சரிபார்த்தனர்.

இதனை தொடர்ந்து இளைஞர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. பின்னர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள் 1,200 மீட்டர் தூரம் ஓடினர். அண்ணா விளையாட்டு மைதானம் 400 மீட்டர் ஓடுதளம் கொண்டதால், அவற்றை இளைஞர்கள் 4 முறை சுற்றி வந்தனர்.

பலத்த பாதுகாப்பு- அதிகாரிகள் ஆய்வு

முன்னதாக நேற்று இரவு 9 மணிக்கு நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் மற்றும் அரசு அதிகாரிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஏற்கனவே அக்னிபத் திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவ வீரர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியிலும், ரோந்து கண்காணிப்பிலும் விடிய, விடிய ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் அண்ணா விளையாட்டு மைதானம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன.

ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே அண்ணா விளையாட்டு மைதானம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்