சென்னை நடுக்குப்பத்தில் உள்ள பழண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம் மீட்பு
சென்னை நடுக்குப்பத்தில் உள்ள பழண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம் மீட்கப்பட்டது.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை பழண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 5 ஆயிரத்து 50 சதுர அடி பரப்பிலான கட்டிடம் கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிகேணி நடுக்குப்பம் பழண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 5 ஆயிரத்து 50 சதுர அடி பரப்பளவு கட்டிடம் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தினை பா.சரவணன் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததால், இவர் மீது சென்னை இணை ஆணையர் மண்டலம்-2 சார்பில் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78-ன்படி வழக்கு தொடரப்பட்டது.
அதன் தீர்ப்பின்படி நேற்று வருவாய் மற்றும் காவல் துறை உதவியுடன் அந்த கட்டிடம் கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும். இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, வட்டாட்சியர் காளியப்பன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.