போலி பத்திரம் மூலம் விற்கப்பட்ட நிலம் மீட்பு
குற்றாலம் பகுதியில் போலி பத்திரம் மூலம் விற்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.
குற்றாலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு பாத்தியப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 17 சென்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த சுடலைமுத்தம்மாள் என்பவர் முருகன் மற்றும் லெட்சுமி ஆகியோருக்கு போலி பத்திரம் மூலம் பத்திர பதிவு செய்து, பின்னர் அவர்கள் பாக்கியலெட்சுமி என்பவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து சுப்பிரமணியன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிசெல்வி ஆகியோர் துரிதமாக விசாரணை நடத்தி போலி ஆவணத்தை ரத்து செய்து, மீட்கப்பட்ட நிலத்தின் ஆவணத்தை போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர், சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தார்.