ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு-வருவாய் துறையினர் நடவடிக்கை

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் ஆக்கிரப்பு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-02-16 18:45 GMT

ஊட்டி

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் ஆக்கிரப்பு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு நிலங்கள்

தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது என்று வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு அங்கு விவசாயம் ஏதேனும் செய்திருந்தால் அவையும் அப்புறப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு வருகிறது.

2 ஏக்கர் நிலம்

இதன் தொடர்ச்சியாக ஊட்டி வட்டத்திற்கு உட்பட்ட பிங்கர்போஸ்ட் என்னும் இடத்தில் சதுப்பு நிலம் என்ற வகைப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அங்கு விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதுவும் மேற்கொள்ள கூடாது, அதில் இருந்து வெளியேறுமாறும், வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் வெளியேறவில்லை.

இதைதொடர்ந்து ஊட்டி ஆர்.டி.ஒ., துரைசாமி உத்தரவின் பேரில் மண்டல துணை தாசில்தார் பொதிகை நாதன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துைறையினர் அப்பகுதிக்கு சென்று நிலத்தை ஆய்வு செய்து அளவீடு செய்தனர். ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தில் மலை காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தொியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த இடம் மீட்கப்பட்டு, சதுப்பு நிலம் என்ற பதிவினை கொண்ட அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதில் அத்துமீறி யாரும் நுழைய கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது, என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்