கோவிலில் திருடிய 4 சிலைகள் மீட்பு; 2 பேர் கைது
கோவிலில் திருடிய 4 சிலைகள் மீட்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோவிலில் திருடிய 4 சிலைகள் மீட்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 பேர் சிக்கினர்
தஞ்சாவூர்-சென்னை மெயின் ரோட்டில் ராம்நகர் பாலம் அருகே கோவில் சிலைகளை சிலர் திருடி செல்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மதுரை சரக சிலை கடத்தல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் ஆகியோர் உத்தரவு பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா தேனாம்படுகையை சேர்ந்த குருசேவ்(வயது 42), தஞ்சாவூர் மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் பகுதியை சேர்ந்த பவுன்ராஜ்(36) என்பதும், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதும் தெரியவந்தது.
4 சிலைகள்
இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கோவிலில் திருடிய உலோக நாகலிங்கம் சிலை, திருவாட்சியுடன் கூடிய உலோக அம்மன் சிலை மற்றும் உலோகத்திலான 2 சிலைகள் ஆகியவற்றை அந்த பகுதியில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த 4 சிலைகளை மீட்டு அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த சிலைகள் எந்த கோவிலில் திருடப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்