தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்;
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
தீ விபத்தில் சேதம்
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் வழியாக சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபம் உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இரவு கோவில் அடைக்கப்பட்ட பிறகு அங்குள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அங்கிருந்த கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. விபத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரைகள் முற்றிலும் சேதம் அடைந்தன.எனவே அன்றைய தினத்தில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல் ஆகம விதிப்படி புனரமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகமும், அரசும் முடிவு செய்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாலக்கோடு அருகே உள்ள பட்டினம் மலை அடிவாரத்தில் உள்ள கற்கள் உறுதியாக இருப்பது கண்டறிந்து அதனை பயன்படுத்த கோவில் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை அளித்தது. அதை தொடர்ந்து அரசு கற்கள் வெட்டி எடுக்க ரூ.6 கோடியே 40 லட்சமும், மண்டப வடிவமைப்புக்கு ரூ.11 கோடியே 70 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்தது. அதை தொடர்ந்து அங்கு கடந்தாண்டு முதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
அடிக்கல் நாட்டு விழா
அதன்படி அங்கு வெட்டி எடுத்து வரப்பட்டு கற்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வளையங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையில் கற்களை தூண்களாக செதுக்கும் பணி திருப்பூர் ஸ்பதி வேல்முருகன் என்பவருக்கு அரசு வழங்கியது. அதை தொடர்ந்து அவருக்கு கோவில் சார்பில் பணியை செய்வற்கான உத்தரவும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வீரவசந்தராயர் புனரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனிஷ்சேகர், மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங்காலோன், இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, மீனாட்சி கோவில் துணை கமிஷனர் அருணாசலம், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செல்லூரில் திருமண மண்டபம்
விழாவில் கலெக்டர் அனிஷ்சேகர் பேசும் போது கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சேதடைந்து, கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணிகள், செல்லூர் பகுதியில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள், எல்லீஸ்நகர் பகுதியில் இரண்டு தளங்கள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.14 கோடி 75 லட்சம் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இது தவிர கோவிலுக்கு சொந்தமான அரசு பெண்கள் பள்ளியில் பயிலும் மாணவியர்கள் நலனுக்காக ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டுப்பட்டுள்ள மூன்று புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் முதல்வரால் திறந்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.