ரூ.106 கோடியில் சோலையாறு அணை புனரமைப்பு

வால்பாறையில் ரூ.106 கோடியில் சோலையாறு அணையில் புனரமைப்பு பணி தொடங்கி உள்ளது.

Update: 2023-01-12 18:45 GMT

வால்பாறை, 

வால்பாறையில் ரூ.106 கோடியில் சோலையாறு அணையில் புனரமைப்பு பணி தொடங்கி உள்ளது.

அணை புனரமைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு அணை உள்ளது. இந்த அணை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் (பி.ஏ.பி.) முக்கிய அணையாக விளங்குகிறது. 160 அடி நீர்மட்டம் கொண்ட சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி 37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அணை பகுதியில் 2 மின் நிலையங்கள் உள்ளது. சோலையாறு மின் நிலையம்-1 இயக்கப்பட்டு 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோலையாறு மின் நிலையம்-2 இயக்கப்பட்டு 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, ஒப்பந்தப்படி தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக வங்கி நிதி உதவியுடன் சோலையாறு அணையில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் சோலையாறு அணையில் புனரமைப்பு பணி மேற்கொள்ள உலக வங்கி நிதி ரூ.106 ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புனரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.

நீர் கசிவு

ஆனால், கடந்த ஆண்டு அதிகளவு மழை பெய்ததால் கடந்த 197 நாட்களாக அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து வந்தது. இதனால் புனரமைப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், தற்போது சோலையாறு அணையின் நீர்மட்டம் 82 அடியாக குறைந்தது. இதையடுத்து சோலையாறு அணையை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அணையின் நீர் கசிவு அளவு கணக்கிடப்பட்டு, நீர் கசிவை கட்டுப்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு சோலையாறு அணையின் பூங்காவில் பராமரிப்பு பணியும் நடந்து வருகிறது. பூங்காவில் சுற்றுலா பயணிகள் அமரும் அறை, விளையாட்டு உபகரணங்களை மாற்றும் பணி, நீரூற்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி அணையின் புனரமைப்பு பணி மற்றும் பூங்கா பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பூங்கா பராமரிப்பு பணி 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. வால்பாறை பகுதி மக்கள் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்