மாங்காய்களுக்கு உரிய விலை பெற்று தர வேண்டும்

முத்தரப்பு கூட்டம் நடத்தி மாங்காய்களுக்கு உரிய விலை பெற்று தர வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினர்.;

Update: 2023-02-24 18:45 GMT

முத்தரப்பு கூட்டம் நடத்தி மாங்காய்களுக்கு உரிய விலை பெற்று தர வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஏற்கனவே கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கால்நடைகளுக்கான தீவன விலை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

பிற மாநிலங்களில் பாலுக்கு உற்பத்தி மானியம் வழங்குவது போல், தமிழகத்திலும் வழங்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் அரசின் கவனத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்க வேண்டும். பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மையம் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. இதனால் மாவிவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

முத்தரப்பு கூட்டம்

அடுத்த மாதம் இறுதியில் மா முத்தரப்பு கூட்டம் நடத்தி, மாங்காய்களுக்கு உரிய விலையை பெற்று தர வேண்டும். மேலும், மாவட்டத்தில் மா எவ்வளவு உற்பத்தியாகிறது என்பதை ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை, மாவட்டத்தில் புஞ்சை நிலங்களில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும். விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானியங்களை மயில்கள், காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிலத்தில் பயிர் செய்வதற்கான தொகை, இழப்பீடு உள்ளிட்டவையை வனத்துறையினர் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக ராயக்கோட்டை அருகே கவுரிபுரம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்மொழிவுகள்

தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது கால்நடைகள் நோய் தாக்கியதால், பால் வரத்து குறைந்துள்ளது. இதனால் சில தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு பாலை கொள்முதல் செய்கின்றனர். பாலுக்கு உற்பத்தி மானியம் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும், பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்படும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்