பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது
பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது;
போத்தனூர்
கோவை அருகே மார்க்கெட்டிற்கு வந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்தது குறித்து தட்டி கேட்ட கணவரை தாக்கிய ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மார்க்கெட்
கோவை மதுக்கரை அருகே நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் 29 வயது பெண். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க சென்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சதீஸ்குமார் (47) என்பவர் அங்கு வந்தார். அவர் அந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்றார். அங்கு நின்றிருந்த சதீஸ்குமாரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரியில் படித்து வரும் தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து அந்த பெண்ணின் கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
கைது
கணவரை தாக்கிய நபர்களை அந்த பெண் தடுக்க முயன்றார். அப்போது அவர்கள் இருவரும் அந்த பெண்ணையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மார்க்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணின் கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதுகுறித்து அந்த பெண் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ரியல்எஸ்டேட் புரோக்கர் சதீஸ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது மகன் பிரவீன்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
----