பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை
ஐகோர்ட்டு உத்தரவின்படி அரசு மருத்துவக்குழுவினர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி (வயது 17) கடந்த 13-ந் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி அவரது பெற்றோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்ததோடு, இதற்காக டாக்டர்கள் குழுவையும் நியமித்து உத்தரவிட்டது. மேலும் மாணவி தரப்பில் அவரது தந்தை மற்றும் அவர்களது தரப்பு வக்கீல் உடன் இருக்கலாம், மறு பிரேத பரிசோதனை செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இதற்கிடையே இதை எதிர்த்தும், தங்கள் தரப்பு டாக்டரையும் சேர்க்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில் வக்கீல் ராகுல் ஷ்யாம் பண்டாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று அவர் முறையிட்டார்.
அப்போது இந்த மனுவை உரிய அமர்வு முன் நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் நீதிபதிகள் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு
இதனிடையே மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் ேநற்று பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதித்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவு
மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு மாணவியின் பெற்றோர் யாரும் வரவில்லை என்று ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் முறையிடப்பட்டது.
அதற்கு, மாணவியின் உடலை பெற்றோர் இல்லாமலேயே மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், பெற்றோர் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்
இதையடுத்து மாணவியின் உடலை மதியம் 1 மணியளவில் மறு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியின் பெற்றோர் வராததால், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகலை, மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டு சுவரில், அங்குள்ள வருவாய்த்துறையினர் ஒட்டினர். பின்னர் அந்த தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையிடம் தெரிவித்தனர்.
வீடியோ பதிவு
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது முக்கிய உறுப்புகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், மறு பிரேத பரிசோதனை செய்தனர். அந்த காட்சிகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ஐகோர்ட்டு உத்தரவு படி மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோவை கோர்ட்டில் சமர்ப்பிப்போம்' என்று தெரிவிக்கப்பட்டது.