ரேஷன் கடைகளை சொந்த கட்டிடத்தில் இயக்க நடவடிக்கை
வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளை சொந்த கட்டிடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
திருவாரூர்
வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளை சொந்த கட்டிடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
கூட்டுறவு வார விழா
திருவாரூரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன், மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவுத்துறை அமைச்சா சக்கரபாணி கலந்து கொண்டு 1262 பேருக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினாா்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய கூட்டுறவு வங்கி
திருவாரூர் மாவட்டத்தில மத்திய கூட்டுறவு வங்கி இல்லை. டெல்டா மாவட்டங்களில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் என 2 மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை அமைச்சர், தனது மானிய கோரிக்கையின் போது திருவாரூர் எம்.எல்.ஏ. திருவாரூக்கு மத்திய கூட்டுறவு வங்கி வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கி திறப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட ரேஷன் கடைகளை பிரிந்து பகுதி நேர அங்காடிகளாக செயல்பட உத்தரவிட்டு அதன் அடிப்படையில் ரேசன் கடைகள் பொதுமக்கள் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கழிவறை
வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் ரேஷன் கடைகளை சொந்த கட்டிடத்தில் செயல்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகளில் புதிய ரேஷன் கடைகள் கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள், சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர ரேஷன் கடைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கடன்
திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கடந்த நிதியாண்டில் 68 ஆயிரத்து 31 நபர்களுக்கு ரூ.3 கோடியே 28 லட்சத்து 15 ஆயிரம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 50 ஆயிரத்து327 பேருக்கு ரூ.2 கோடியே 86 லட்சத்து 27 ஆயிரம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1526 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 18469 மகளிருக்கு சுமார் ரூ.34 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கண் கருவிழி பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் சுமார் 3553 பேருக்கு ரூ.6 கோடியே 60 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் கழிவறை கட்டிடம் கட்டிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண் கருவிழி பதிவை பயன்படுத்தி பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை திருநெல்லிகேணி-சேப்பாக்கம் தொகுதி, அரியலூர் ஆகிய 2 இடங்களில் சோதனை முறையில் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகம் முமுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.