ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
4ஜி சிம் கார்டுகள் வழங்க கோரி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
ஊட்டி,
அத்தியவாசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம் மற்றும் 4ஜி சிம்கார்டுகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமதுகான், பொருளாளர் விஷ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து பணியாளர்கள் கூறும்போது, மகளிர் ரேஷன் கடை, மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடைகளை அரசே ஏற்று நடத்திட வேண்டும். 4 மாதங்களாக வழங்கப்படாத விளிம்பு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன கடை பணியாளர்ளுக்கு ஊக்கத் தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.10 வழங்கிட வேண்டும் என்றனர். இதில், நிர்வாகிகள் அன்னம்மா, ஷோபனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.