பெருமாள் கோவில்களில் ரத சப்தமி விழா
ஆரணி, செங்கத்தில் பெருமாள் கோவில்களில் ரத சப்தமி விழா நடந்தது.;
ஆரணி
ஆரணி, செங்கத்தில் பெருமாள் கோவில்களில் ரத சப்தமி விழா நடந்தது.
ரத சப்தமி விழா
ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது.
இதையொட்டி அதிகாலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் சாமியை சூரிய பிரபை வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், கற்பக விருட்சக வாகனம், சந்திர பிரபை வாகனம் ஆகிய 7 வாகனங்களில் காலை முதல் இரவு வரை சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருவீதி உலா
இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலுமங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில், தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ரதசப்தமி விழாவையொட்டி 7 வாகனங்களில் மாட வீதியின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.
மேலும் ஆரணி - இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செங்கம்
செங்கம் நகரில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா நடந்தது. இதை முன்னிட்டு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் ரத சப்தமி விழா நடந்தது.