காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை 'செருப்பு' மீன்கள் - ரூ.30 கோடிக்கு ஏற்றுமதி

சென்னை காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை ‘செருப்பு’ மீன்கள் வெளிநாடுகளுக்கு ரூ.30 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-17 05:33 GMT

சென்னை காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர், கடந்த ஜூலை மாதம் முதல் நேற்று வரை மீனவர்கள் வலையில் 'லெதர் ஜாக்கெட்' எனப்படும் அபூர்வ வகை மீன்கள் டன் கணக்கில் சிக்கியது. இந்த வகை மீன்களை 'செருப்பு' மீன்கள் என்றும் அழைக்கின்றனர்.

இந்த வகை மீன்கள் எப்போதும் 100 டன் வரையே கடலில் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு மொத்த விசைப் படகுகளில் சேர்த்து கடந்த 3 மாதங்களில் அளவுக்கு அதிகமாக சுமார் 1 லட்சம் டன் வரை மீனவர்கள் வலையில் சிக்கி உள்ளது.

இந்த மீன்களை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இந்த மீன்களை அப்படியே காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். அந்த மீன்களின் தோல் வெளிநாடுகளில் கோட், தொப்பி போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.இந்த மீன்கள் கிலோ ரூ.300 என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காசிமேட்டில் இருந்து கொச்சினுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கிருந்து அதிகப்படியாக ஏற்றுமதி செய்கிறார்கள். காசிமேடு மீனவர்களும் ஏஜெண்டுகள் மூலமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

கடந்த ஆண்டுவரை 100 டன் அளவிலேயே கிடைத்த இந்த மீன்கள், கடந்த 3 மாதங்களில் மட்டும் அதிகளவில் கிடைத்து உள்ளதால் ரூ.30 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது இதுவே முதல்முறை என காசிமேடு மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்